Friday 6 September 2019

ஏக்கம் ! - பொதிகை மின்னல் (ஆகஸ்ட் - 2019) இதழில் வெளிவந்தது

ஏக்கம் !


“என்னடி சந்தியா, திருவிழா கடைத் தெருவ பத்து தடவை சுத்தி வந்துட்டோம். என்னதான்டி வாங்கனும்?” என்றாள் நந்திதா.
“ஒரு பொருளை தேடிகிட்டு இருக்கேன். கிடைக்க மாட்டுது.” என்றாள் சந்தியா.
“சொன்னா நானும்தேடுவேன்ல” என்றாள் நந்திதா.
“பைனாக்குலர் வாங்குனும்டி” என்றாள் சந்தியா.
“நீ நினைச்சா தரமான கம்பெனி பைனாக்குலரே வாங்கலாம். ஏன்டி பொம்மை பைனாக்குலர் வாங்க இந்தச் சுத்து சுத்துற?” என்றாள் நந்திதா.
“எனக்கு இல்லடி” என்றாள் சந்தியா.
“அப்புறம் யாருக்குடி சந்தியா?” என்றாள் நந்திதா.
“அது வந்து... என் அப்பாவுக்கு” என்றாள் சந்தியா.
“ஏன்டி அப்பாவுக்குப் பொம்மை பைனாக்குலர் வாங்கித் தர?” என்றாள் நந்திதா.
“அப்பா சின்னப் பிள்ளையா இருக்கும் போது, அவங்க வீட்டு பைனாக்குலர் வாங்க காசு தரமாட்டாங்களாம். அது ரொம்ப ஏக்கமாக இருக்குமாம். அப்பாவோட நண்பர்கள் எல்லாம் வாங்கி வச்சி புது புதுசா காட்சிகளைப் பார்த்துச் சொல்வாங்களாம். அது இன்னும் ரொம்ப ஏக்கமாக இருக்குமாம்.

இதெல்லாம் எனக்கு விபரம் தெரியும் வயசுல இதெல்லாம் சொன்னாங்க. அதிலிருந்து எந்தத் திருவிழாவுக்குப் போனாலும், பைனாக்குலர் வாங்கிக் கொடுப்பேன். அதை அப்பா வாங்கும் போது முகத்தில் தெரியும் சந்தோசத்தைப் பார்க்க கோடி கண்கள் வேணும். நான் உலக அளவில் புகழ் பெற்ற பே|ஷன் டிசைனரா இருக்கேன்னா, எந்த ஏக்கமும் இல்லாம வளர்த்த என் அப்பாவோட உழைப்பு” என்றாள் சந்தியா.


Tuesday 9 April 2019

உணர்வு ! - பொதிகை மின்னல் (மார்ச் - 2019) இதழில் வெளிவந்தது

உணர்வு !

“உங்க அப்பா எனக்கு வண்டி வாங்கி தரலை. அதனால எல்சிடி டீவி வாங்கி தரசொல்லுடி, ஏசி வாங்கி தரசொல்லுடி.” என்று அடிக்கடி அக்கா மீராவிடம் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டதும் குருவுக்கு மனது கஷ்டப்பட்டது. அக்காவை மாமா ரொம்ப கொடுமை படுத்துகிறாரோ என்று.

அடுத்த சில வாரங்களில் மீராவுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமணையில் சேர்த்;தார்கள். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் பணம் ஏற்பாடு செய்யுங்கள் என்று மருத்துவர்கள் சொல்லிவிட, பணத்திற்கு படாத பாடுபட்டு ஏற்பாடு செய்தான் கிருஷ்ணன்.

“மாமா என்கிட்ட 15,000 ரூபாய் இருக்கு தரவா மாமா.” என்றான் குரு

“மாப்பிள்ளை 10,000 ரூபாய் உங்க வங்கி கணக்குல போடவா?.” என்று தொலைபேசியில் கேட்டார் ஊரில் இருந்த மாமனார்.

“வேணாம். தேவைன்னா கேக்குறேன்.” என்று மறுத்தான் கிருஷ்ணன்.

“ஏண்ணா நாங்க பணம் கொடுத்தா வாங்க மாட்டிங்களா? நாங்க உங்க தங்கை இல்லையா? நாங்கள் செய்யாம வேறு யாரு செய்வதாம்.” என்று உரிமையோடு சண்டையிட்டாள் மைத்துனரின் மனைவி மீனாட்சி.

“இல்ல மீனாட்சி. என் மனைவிக்கு நான்தான் செய்யனும். என் உணர்வுகளுக்கு தயவு செய்து மதிப்பு கொடுங்கள்.” என்று சொன்னான் கிருஷ்ணன். இதை கேட்ட குருவுக்குள் கிருஷ்ணனின் மதிப்பு உயர்ந்தது.

சில மாதங்கள் கழித்து, “உங்க அப்பா எனக்கு வண்டி வாங்கி தரலை.” என்று கிருஷ்ணன் மீராவிடம் சொல்ல, குரு சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.







ஆசை... தோசை... - பொதிகை மின்னல் (பிப்ரவரி - 2019) இதழில் வெளிவந்தது

ஆசை... தோசை...

குந்தைகள் சத்தத்தால் வீடே அதிர்ந்தது.

“தாத்தா என்னை ஊஞ்சல்ல வைச்சி ஆட்டுங்க தாத்தா” என்று கொஞ்சலாய் சொன்னாள் மூத்தமகனின் மகள் சுமித்ரா.

“தாத்தா என்னை உப்பு மூட்டை தூக்குங்க தாத்தா.” என்றான் இளைய மகனின் மகன் சுரேஷ்.

“என்ன மாமா பிள்ளைகள் ரொம்ப தொந்தரவு செய்யிறாங்களா? சாப்பிடுங்க மாமா” என்றபடி மூத்த மருமகள் இளையநிலா முடக்கத்தான் தோசையுடன் வந்தாள்.

“குழந்தைகளா தாத்தாவை தொந்தரவு பன்னாதீங்க. கொஞ்சம் ஜுஸ் குடிங்க மாமா”  என்றபடி இளைய மருமகள் மல்லிகா சர்க்கரை கலக்காத திராட்சை பழசாறுடன் வந்தாள்.

“அப்பா நம்ம தொழிலாளர்களுக்கு இனிமேல் முதல் தேதியே சம்பளம் கொடுக்கனுப்பா” என்றபடி விடைப்பெற்று சென்றான் மூத்த மகன் சிவராஜ்.

“இந்த வருடம் கணிசமாக சம்பளம் ஏத்திக் கொடுக்கனும் நம்ம தொழிலாளர்களுக்கு.” என்று சொல்லி சிறிது நேரம் ஆலோசணை கேட்டு, விடைப் பெற்றான் இளையமகன் சண்முகம்.

“ஏங்க, நான் முருகன் கோயிலுக்கு போயிட்டு வரேன்.” என்று கிளம்பினாள் மனைவி வளர்மதி.

“ஐயா, ஐயா” என்று எழுப்ப, தூங்கிக் கொண்டிருந்தவர் கண்களை திறந்தார், வீடே அமைதியாக இருக்க, எதிரே கோதுமை தோசையுடன் நின்றிருந்தான் வேலைக்காரன் கதிர்.







Thursday 6 December 2018

ஆதரவு ! - பொதிகை மின்னல் (டிசம்பர் - 2018) இதழில் வெளிவந்தது

ஆதரவு !

“அய்யா, நாளைக்கு வருமான வரி வழக்கு தீர்ப்பு வருது. நீங்களும் வந்தா நல்லா இருக்கும்.” என்றார் வழக்கறிஞர் ரத்னாகர்.

“அவசியம் வரனுமா?” என்று கேட்டார் பிரபல தொழில் அதிபர் மதன்.


“நீதிபதி, புதுசா வந்திருக்காங்க. நீங்களும் வந்தா நல்லாயிருக்கும்” என்றார் ரத்னாகர்.


“சரி. வரேன். நீங்க ஆக வேண்டிய வேலைகளை பாருங்க” என்றான் மதன்.


மறுநாள், நீதிமன்றத்தில்,


“ஆகவே, அபராதமும் சேர்த்து 5 கோடி கட்டவேண்டும். இல்லை என்றால் விளையாட்டு வீரர் ஒருவரை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வீரர் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கும் வரை.” என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.


“விளையாட்டு வீரரை தத்தெடுக்குறோம்” என்றான் மதன். அனைத்தும் முடிந்ததும் காரில் ஏறியதும்,


“அய்யா, 5 கோடி பணத்தை கட்டினால் வேலை முடிந்திருக்குமே. விளையாட்டு வீரருக்கு இன்னும் பல கோடி செலவாகுமே.” என்றார் ரத்னாகர்.


“சரிதான். ஆனால் விளையாட்டு வீரரை யாரும் தத்தெடுக்க மாட்டுறாங்க. 5 கோடி பணம் கட்டுவதை விட 10 கோடி விளையாட்டு வீரருக்கு செலவு செய்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கினால் இந்தியாவுக்கே பெருமை. நமது நிறுவனத்திற்கும் விளம்பரம். அதனால் வருமானம் அதிகம் கிடைத்தால் தாராளமாக செலவு செய்யலாமே.


இதை பார்க்கின்ற மற்ற நிறுவனங்களும் செய்ய ஆரம்பிக்கும், கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பதக்கப்பட்டியிலில் நம் நாடும் இடம் பெறும். அந்த நீச்சல் வீரர் மாதிரி, ஆதரவு கிடைக்காமல் வெளிநாட்டில் போய் கலங்கிய மனதுடன் வேலை பார்க்க வேண்டி இருக்காது.” என்றான் மதன்.


“உங்களுக்கு தொலை நோக்கு பார்வை மட்டுமல்ல, பெரிய மனசும்” என்றார் ரத்னாகர்..








Wednesday 28 November 2018

சந்ததி ! - குமுதம் (05-12-2018) இதழில் வெளிவந்தது

சந்ததி !

“சித்ரா, 10 பாக்கெட் பிஸ்கெட் போதுமா?” என்று கேட்டாள் ஜெயந்தி.

“ரம்யாகிட்ட கேளு. போதும்ன்னா வாங்கு” என்றாள் சித்ரா.


“சித்ரா, குங்குமம் எத்தனை டப்பா வேணும்” என்றாள் ரேவதி.


“ரம்யாகிட்ட கேளு. எவ்வளவு சொல்லுறாளோ வாங்கு” என்றாள் சித்ரா.


“சித்ரா, சரண”யாவை கோயிலுக்குக் கூட்டி போயிட்டு வந்திடவா,” என்றாள் விஜி.


“ரம்யாகிட்ட சொல்லிட்டு கூட்டி போயிட்டு வா” என்றாள் சித்ரா.


“என்ன சித்ரா, எல்லாத்தையும் உன் மகள் ரம்யாகிட்ட கேட்க சொல்லுற.” என்றாள் விஜி.


“நான் 30 வருஷமா எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்கேன். இனிமே நம்ம பிள்ளைகள் பாக்கனும். அது மட்டுமில்லாம, நாமெல்லாம் இருக்கும் போதே, அவர்கள் முடிவெடுக்க விடனும். அவர்கள் தவறான முடிவு எடுக்கும் போது எச்சரிக்கனும். நம்முடைய அனுபவத்தை அவர்களுக்கு சொல்லித்தரனும். 


நாம இருக்கும் போதே நம்ம பிள்ளைகள் திறமையாக நிர்வாகிக்க முடிஞ்சுதுன்னா, அவர்களோட எதிர்காலம் இன்னும் நல்லா இருக்கும். இப்ப, ரம்யாகிட்ட சொல்லிட்டு கூட்டி போயிட்டு வா. விஜிம்மா.” என்றாள் சித்ரா. 


“நல்ல அக்கா, கொடுத்து வைத்த மகள் மட்டுமல்ல, உன் தங்கைகளாகிய நாங்களும்,” என்று சொன்னாள் விஜி.





Wednesday 7 November 2018

இசை இளவரசி ! - பொதிகை மின்னல் (நவம்பர் - 2018) இதழில் வெளிவந்தது

இசை இளவரசி !

“ஏன்டி பிரிதிக்கா, பாட்டு போட்டியில பாடி உலக புகழ்வந்துடுச்சில்ல!” என்றாள் ராகவி.

“ஆமாம்” என்றாள் பிரிதிக்கா.

“பக்கத்து நகரத்துல இருந்து சென்னையில இருக்கிற பெரிய நடிகரே உன் படிப்பு செலவ ஏத்துகிட்டார்.” என்றாள் ராகவி.

“ஆமாம்டி ராகவி. என்ன சொல்ல வர” என்றாள் பிரிதிக்கா.

“நீ சென்னைக்கு போய் பெரிய பள்ளிக்கூடத்தில சேரலாமுல்ல. இந்த மொட்ட கிராமத்தில் இன்னும் இருக்க. அங்கே போனா நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும்.” என்றாள் ராகவி.

“நான் புகழ் பெற்றதே இந்த மண்ணின் மணத்திற்காகத்தான் ராகவி. இந்த ஊர்ல உள்ள எல்லோரும் என்னை தங்கள் வீட்டு குழந்தையா நினைக்கிறாங்க. முதல் முறையா விமானத்தில் வந்து இறங்கிய போது, அவங்க வீட்டு பிள்ளை வெளிநாடு போயிட்டு வந்த மாதிரி ஆரத்தி எடுத்து எல்லாம் இன்னும் என் கண்ணுக்குள்ளே நிக்குது.

ஏதாவதுன்னா ஊரே என்னை தாங்கு… தாங்கு… ன்னு தாங்குறாங்க. என் ஆசிரியர்கள், தோழிகள், என்னுள் தன்னம்பிக்கையை விதைத்த என் குரு, எல்லோருடைய அருகிலும் நான் இருக்கனும். 

அதுமட்டுமில்லாம இந்த இசையின் ஞானம் இந்த ஊரும் இந்த
சொந்தங்களும்தான் கொடுத்தது. அதை மற்றவர்கள் உரிமை கொண்டாட நான் விரும்பவில்லை. அவர்களுக்கு இந்த உலகத்தையே இங்கிருந்தே காண்பிக்க வேண்டும். என்பதுதான் என் ஆசை.” என்றாள் பிரிதிக்கா.

"ரொம்ப பெரிய மனசுடி. அதான் இந்த ஊரில் எல்லோரும், எங்கள் ஊர் தேவதை என்று கொண்டாடுகிறார்கள்." என்றாள் ராகவி.




சங்கடம் ! - குமுதம் (31-10-2018) இதழில் வெளிவந்தது

சங்கடம் !

“முன்னாடி மாதிரி இல்ல லலிதா. சில்லரை வியாபாரம் குறைஞ்டுச்சி. பெரிய
வியபாரம் ரொம்பக் குறைஞ்சுடுச்சி. அவர் இருக்குற வேலைல சம்பளம் சரியா
தரமாட்டுறாங்க. வேற வேலைக்குப் போகனும்முன்னு நினைச்சா பாதிச் சம்பளம்
தருவேன்னு சொல்லுறாங்க.
அவருக்கு இந்த வேலையும் விடமுடியலை, வேற வேலைக்கும் போக
முடியவில்லை. வீட்டு லோன் சரியா கட்ட முடியவில்லை. வீட்டையும் விற்க முடியாம தவிப்பா போயிட்டு இருக்கோம்.” என்றாள் லெஷ்மி ஆனந்த்.
“அப்படியாம்மா. எங்களுக்கும் அப்படித்தான் இருக்கு. அதனாலத்தான் எங்க
வீட்ட விற்க போகிறோம். கவலைபடதீங்கம்மா எல்லாம் சரியாயிடும்.” என்று
வருத்தமாய்ச் சொல்லிக் கிளம்பினாள் லலிதா.
“ஏன் லெஷ்மி, நீ சொன்ன மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்லையே. அப்புறம்
ஏன் அப்படிச் சொன்ன?” என்று வீட்டுக்குள் வந்ததும் கேட்டார் ஆனந்த்.
“இல்லங்க… ஏதோ அவங்களுக்குக் கஷ்டம். அதனால ஆசை ஆசையாய் வாங்கிய வீட்டை விற்க போறாங்க. அது எவ்வளவு துயரமானதுன்னு நமக்குத் தெரியுமே... அதனால அவங்க மனசு கஷ்டபடாம இருக்க நாமளும் கஷ்டபடுறோம்ன்னு சொன்னேன்.
நம்ம நிலையைக் கேட்டு, பரவால்ல நம்மல வீட்டை விற்கவாச்சும் முடிச்சுதே என்ற நிம்மதியோடு சந்தோசமா வீட்டை விற்பாங்க!” என்ற லெஷ்மியை மெச்சினான் ஆனந்த்